சர்க்கரை நோய் என்றால் என்ன?
சர்க்கரை நோய் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பு சர்க்கரையை பற்றி பார்ப்போம்.
பொதுவாக சர்க்கரை என்றால் இனிப்பு என்று தான் எல்லோரும் சொல்வார்கள், சர்க்கரை நோயை பொருத்தவரை அது தவறு.
நாம் ஒரு செயலினை செய்ய அதாவது எழுத, நடக்க, உட்கார, ஏன் தூங்ககூட நமக்கு சக்தி தேவைப்படுகிறது அந்த சக்தியை அளிப்பது சர்க்கரை அல்லது குளுக்கோஸ்.
சர்க்கரை என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் உள்ளது
இந்தச் சக்தியைத் தருவது குளுக்கோஸ் என்கிற சர்க்கரைச்சத்து, இது எங்கே கிடைக்கிறது?
நம் உணவில் உள்ள மாவுசத்து (இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், அரிசி, கோதுமை) புரதசத்து, கொழுப்புசத்து, பொருட்களிருந்து கிடைக்கிறது. நம்முடைய குடல் நாம் சாப்பிடும் உணவு பொருள்களை குளுக்கோசாக மாற்றி இரத்தத்தின் வழியாக எல்லா உறுப்புகளில் இருக்கும் செல்களுக்கும் அனுப்புகிறது.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அப்படியே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள பல உறுப்புகளுக்கு தெரிவதில்லை அதற்கு இன்சுலின் என்ற ஒரு இயக்குநீர் (ஹார்மோன்) தேவைப்படுகிறது அதாவது இன்ஸ்சுலின் உடல் உறுப்புகளின் செல்கள் செயல்பாட்டுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றித்தருகிறது.
இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது பான்கிரியாஸ் என்ற கணையச்சுரப்பி, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த சுரப்பியில் இருக்கும் பீட்டா செல்கள். இந்த பீட்டா செல்கள் ஒவ்வொன்றும் இன்சுலின் தயாரிக்கும் தொழிற்சாலைகள். இது மனித உடல் அமைப்பின் இன்சுலின் தயாரிக்கும் தொழிற்சாலையான பீட்டா செல்கள் அடங்கிய பான்கிரியாஸ், இரைப்பையின் பின்புறம் அமைந்துள்ளது.
இன்சுலின் தயாரிப்பு உடலில் சீராக நடைபெறும்பொழுது எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் 80 -120 மில்லி கிராம்ஸ் அளவுக்கு இருக்கிறது.
ஆனால் இந்த இன்சுலின் "தயாரிப்பிலோ"(Insulin Production) அல்லது "செயல்பாட்டிலோ"(Insulin Action) குறைப்பாடு ஏற்படும் பொழுது உடல் உறுப்புகளின் செல்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் உடல் இயக்கத்திற்கு போதிய சக்தி கிடைக்காமல் முழி பிதுங்குகிறது, அதனால் இரத்தத்தில் சர்க்கரை கூடுகின்றது. இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை சர்க்கரை தாண்டும் பொழுது கூடுதல் சர்க்கரை வெளியேற்றியே (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்) ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அதிகமான சர்க்கரை நீர்த்தாரைகளை அடைத்துக் கொண்டால் அபாயமாகிவிடும். இந்த பிரச்சனையைத் தடுக்கிறேன் என்று சீறுநீரகம் உடல் தேவைக்கு அதிகமுள்ள இரத்த சர்க்கரையை சிறுநீரில் கரைத்து வெளியேற்றுகிறது.
இந்த நிலை நீடிக்கும்பொழுது உடலின் பல செல்கள் வயலில் தண்ணீர் விடாத பயிர் போல வறண்டு செயலிழந்துவிடுகின்றன. இதனால் தான் சர்க்கரை நோயளிக்கு களைப்பும், அசதியும், அதிக தண்ணீர் தாகமும் ஏற்படுகின்றது. சிறுநீர் மூலம் சக்தியை இழப்பதனால் நீர் மூலம் இழப்பு - நீரிழிவு நோய் ஆயிற்று.
No comments:
Post a Comment